வித்தியாசமான கதைக்களத்துடன் நல்ல தரமான படங்களை தயாரித்து வரும் எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் V.மதியழகன் தயாரிப்பில் தயாராகும் படம் சாமான்யன். கிட்டத்தட்ட பத்து வருட இடைவெளிக்குப்பிறகு மக்கள் நாயகன் நடிகர் ராமராஜன் இந்தப்படத்தின் மூலம் கதாநாயகனாகவே தமிழ் சினிமாவில் மறுபிரவேசம் செய்கிறார். இந்த படத்தை இயக்குநர் ராகேஷ் இயக்குகிறார். இவர் ஏற்கனவே தம்பிக்கோட்டை, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ஆகிய படங்களை இயக்கியவர்.
இந்த படத்தில் கதாநாயகியாக நக்சா சரண் என்பவர் நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், ராஜாராணி பாண்டியன், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இந்த படம் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் மற்றும் இந்தியிலும் என ஐந்து மொழிகளில் தயாராகிறது. இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை தி நகரில் உள்ள கிருஷ்ணவேணி திரையரங்கில் விமரிசையாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ராமராஜன், ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட படக்குழுவினருடன் மலேசிய முன்னாள் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் குலசேகரன், இயக்குனர் சந்தானபாரதி, கவிஞர் சினேகன், கும்கி-2 பட கதாநாயகி ஷ்ரத்தா ராவ், பாக்ஸர் பட கதாநாயகி ஆர்யா செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நடிகர் ராதாரவி பேசும்போது, “இது வேற ரூட்டில் போயிருக்க வேண்டிய படம். இதன் நல்ல நேரமோ என்னவோ ராமராஜன் இந்த படத்தில் வந்து இணைந்து விட்டார். நான் ராம.நாராயணன் இயக்கத்தில் பேய்வீடு படத்தில் நடித்த சமயத்திலேயே ராமராஜனை அந்தப்படத்தின் உதவி இயக்குனராக எனக்கு தெரியும். அப்போதே அவரிடம் சில விஷயங்களை கவனித்து சீக்கிரமாக நீ நடிகன் ஆகிவிடுவாய் என்று சொன்னேன்.. அதுதான் நடந்தது. அதன்பிறகு அவருடன் சில படங்களில் இணைந்து நடித்துள்ளேன். ராமராஜன் என்றைக்குமே ரஜினி கமலுக்கு போட்டியாக இருந்ததில்லை. அவரது படங்கள் அந்த இருவரின் படங்களை விட நன்றாக ஓடின. அவ்வளவுதான்.. ஆனால் மற்ற ஹீரோக்களுக்கு ஒரு பயத்தை ஏற்படுத்தினார் என்பதை மறுக்க முடியாது.
இயக்குநர் ராகேஷ் இதற்கு முன்பு இயக்கிய மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ? படத்தில் கூப்பிட்டு ஒருநாள் மட்டும் வேலை கொடுத்தார். இப்போது கொஞ்சம் இம்ப்ரூவ் ஆகி இந்த படத்தில் ஏழு நாட்கள் வேலை இருப்பதாக கூறியுள்ளார்.
எல்லாரும் தியேட்டருக்கு வந்து படம் பார்க்க வேண்டும். ஆனால் தியேட்டருக்கு வந்தால் செலவாகிறது என்று சொல்லக்கூடாது. படம் பார்க்க வந்தால் டிக்கெட் மட்டும் வாங்குங்கள். பாப்கார்ன், கூல்ட்ரிங்க்ஸ் எல்லாம் வாங்கி நீங்களாக செலவை இழுத்துவிட்டுக்கொண்டு அதற்கு விலைவாசியை காரணம் காட்டாதீர்கள்” என்று பேசினார்.
மலேசிய முன்னாள் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் குலசேகரன் பேசும்போது, “இந்த படத்தின் தயாரிப்பாளர் மதியழகன் தயாரிக்கும் படங்கள் மலேசியாவிலும் வெளியாகி வருகின்றன. அரசியல், தேர்தல் காரணமாக பிஸியாக இருப்பதால் திரைப்படங்களை பார்க்க முடியவில்லை. ஆனால் சமீபத்தில் என் மனைவி இவர்கள் தயாரிப்பில் வெளியான மஹா என்கிற படத்தை பார்த்துவிட்டு வந்து, கட்டாயம் நீங்களும் பாருங்கள் என்று என்னை வலியுறுத்தினார். அந்த அளவுக்கு நல்ல படங்களாக தொடர்ந்து தயாரிக்க வாழ்த்துகிறேன்” என்று கூறினார்
இவ்விழாவில் கலந்து கொண்ட M.S.பாஸ்கர் உள்ளிட்ட இன்னும் பல விஐபிகளும் ராமராஜனின் ரீ-எண்ட்ரியையும் தயாரிப்பாளர் மதியழகனையும் வரவேற்று பேசிட, இவ்விழா இனிதே நிறைவுற்றது.