தமிழ் திரை உலகில் பேயை வைத்து ‘ யாமிருக்க பயமே’ எனும் நகைச்சுவை திரைப்படத்தை இயக்கி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த இயக்குநர் டீகே இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘காட்டேரி’. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா மற்றும் அபி & அபி பிக்சர்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவன் இணைந்து தயாரித்திருக்கும் இந்த திரைப்படம் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது.
இதனை முன்னிட்டு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா, இயக்குநர் டீகே, நாயகிகள் ஆத்மிகா, வரலட்சுமி சரத்குமார், நாயகன் வைபவ் ஒளிப்பதிவாளர் விக்னேஷ் வாசு உள்ளிட்ட படக்குழுவினரும், திரையுலகினரும் கலந்து கொண்டு மேடையில் உரையாற்றினர்.
நடிகை வரலட்சுமி சரத்குமார் பேசுகையில்,
படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்ற போது, ஒரே வாகனத்தில் நானும், ஆத்மிகாவும் தங்கி படப்பிடிப்பில் கலந்து கொண்டோம். நகைச்சுவை படங்களில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பமாக இருந்தது அந்த ஆசை ‘காட்டேரி’ படத்தில் நிறைவேறி இருக்கிறது.
படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் டீகே பேயாக உழைத்தார். படப்பிடிப்பு நடைபெற்ற சில இடங்களில் அங்கு நிலவும் பருவநிலை எங்களுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. இந்தப் படத்தில் என்னுடைய சகோதரியாக மான்சி என்றொரு நடிகை நடித்திருந்தார். அவரும் நேர்த்தியாக ஒத்துழைப்பு வழங்கினார். ரசிகர்களுக்கு நல்லதொரு திரை விருந்தாக இருக்கும் காட்டேரி ” என்று அமர்ந்தார்.
ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் வெளியாகும் ‘காட்டேரி’ படத்தில் நடிகர்கள் வைபவ், கருணாகரன், நடிகைகள் சோனம் பஜ்வா, ஆத்மிகா, வரலட்சுமி சரத்குமார், மனாலீ, பொன்னம்பலம், ரவி மரியா, மைம் கோபி, ஜான் விஜய், லொள்ளு சபா மனோகர், சேத்தன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு எஸ். என். பிரசாத் இசையமைத்திருக்கிறார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா மற்றும் அபி & அபி பிக்சர்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவன் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.